சிரம்பான், ஜன 2: போர்ட்டிக்சனில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வானவெடிகள் வெடித்ததில் அது மேற்கூரையில் பட்டு ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயமடைந்தார்.
நண்பகல் 12.30 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் முகத்தில் ஏற்பட்ட காயங்களினால் 40 வயதுடைய நபர் இறந்த நிலையில் அவரின் நண்பர் (39) போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப் பட்டதாகப் போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஐடி ஷாம் மொஹமட் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட இருவரும் 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹோட்டலில் வான வெடிகளை கையாள பணியமர்த்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் ஆவர்.
"சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இந்தப் பிரச்சனையை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஐடி ஷாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, ஹோட்டலில் பல பட்டாசுகள் வெடித்ததைக் காட்டும் 1.04 நிமிட வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலானது.
– பெர்னாமா




