கிள்ளான், ஜன 1- கடந்தாண்டு முழுவதும் செமெந்தா தொகுதி நிலையில் நடத்தப்படும் மாநில அரசின் மலிவு விற்பனையில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதாக கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் என்.எஸ். முத்துமாரியம்மா கூறினார்.
சந்தையை விட குறைவான விலையில் பொருட்கள் விற்கப்படும் காரணத்தால் இந்த மலிவு விற்பனை நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் பொது மக்கள் சிறப்பான ஆதரவை வழங்கி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மலிவு விற்பனை நடைபெறும் போதெல்லாம் வரிசை எண்களைப் பெறுவதற்காக பொது மக்கள் காலை 7.30 மணிக்கெல்லாம் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக இத்தகைய மலிவு விற்பனைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார் அவர்.
கிள்ளான், டத்தோ அகமது ரசாலி மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மலிவு விற்பனையில் வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட சமையல் பொருட்கள் குறைவான விலையில் விற்கப்பட்டன என அவர் சொன்னார்.
இங்கு 500 வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பொட்டலங்களை 10 வெள்ளி விலையில் தாங்கள் விற்பனைக்கு வைத்ததாக கிள்ளான் சமூக நல அமைப்பின் செயல் குழு உறுப்பினர் கிறிஸ் யாப் கூறினார்.








