பாசீர் மாஸ், டிச 29 - இங்குள்ள ஸ்ரீ கிளம்பாங் தேசியப் பள்ளியில்
அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள இலவச மருத்துவப் பரிசோதனை வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் லேசான உடல் நலப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோங் சுகாதார கிளினிக் மற்றும் மலேசிய ஆயுதப்படையின்
பெங்காலான் செப்பா முகாமின் மருத்துவ மைய பணியாளர்கள் இணைந்து
நடத்தி வரும் இந்த பரிசோதனை இயக்கம், கடந்த மூன்று தினங்களாக
இந்த துயர் துடைப்பு மையத்தில் தங்கியிருக்கும் தனக்கு உரிய சிகிச்சை
பெறுவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நோர் அய்டி
இஸ்மாயில் (யது 58) கூறினார்.
இங்கு இத்தகைய மருத்துவ பரிசோதனைச் சேவையை ஏற்பாடு
செய்ததற்காகத் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், துயர்
துடைப்பு மையத்தில் தங்கியிருக்கும் போது உடல் நலக்குறைவுக்கு
ஆளாகும் பொது மக்களுக்குப் பேருதவியாக உள்ளது என்றார்.
இந்த நிவாரண மையத்தில் இருக்கும் போது எங்களின் உடல் நலப்
பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடிகிறது என்று அவர் மேலும்
சொன்னார்.
இதனிடையே, இந்த தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருந்த போது
தனது இரண்டு வயது குழந்தை பூச்சிக் கடிக்கு ஆளானதைத் தொடர்ந்து
இந்த மையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் உரிய சிகிச்சையை விரைந்து
வழங்கியதாக ருஸ்னி சசிலோர் (வயது 25) தெரிவித்தார்.
இந்த நிவாரண மையத்தில் கோவிட்-19 உள்ளிட்ட மூன்று நோய்கள் மீது
தாங்கள் முக்கிய கவனம் செலுத்துவதாக மருத்துவ அதிகாரியான
கேப்டன் டாக்டர் சைட் அமிர் அஸ்பார் சைட் அகமது கூறினார்.
இந்த மையத்தில் தங்கியுள்ளவர்கள் சாதாரண நோய்களுக்குத்
தேவையான மருந்துகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பும் வழங்கப்படுவதாக
அவர் தெரிவித்தார்.




