ஷா ஆலம், டிச 29: கோவிட்-19 நோய்த்தொற்றை தவிர்ப்பதற்காக (TRIIS) திரீஸ் எனப்படும் (சோதனை, அறிக்கை, தனிமை, தகவல், சிகிச்சை பெறுதல்) முறையை நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
கோவிட்-19 நோயாளிகள் பொது இடங்களில் சுய கட்டுப்பாட்டுடன் இம்முறையும் கூடுதலாக சுகாதார கட்டுபாடு நடை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
"பண்டிகைக் காலம் மற்றும் பள்ளி விடுமுறைகளைத் தொடர்ந்து கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. எனவே நாம் எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
"உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், முகக்கவரியை அணியுங்கள் மற்றும் எப்போதும் கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள். அறிகுறிகள் தென்பட்டால், குறிப்பாக அது தீவிரமாக இருந்தால் சிகிச்சை பெறுங்கள்" என்று அவர் முகநூலில் வீடியோ பதிவு மூலம் தெரிவித்தார்.
அதிக ஆபத்துள்ள குழுக்கள் அல்லது பொதுமக்களுடன் வழக்கமாக பழகும் நபர்கள், கோவிட்-19 தடுப்பூசியை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகப் பெறுமாறு ஜமாலியா அறிவுறுத்தினார்.
முன்னதாக, டிசம்பர் 17 முதல் 22 வரையிலான 51 வது தொற்றுநோயியல் வாரத்திற்கான கோவிட் -19 சம்பவங்கள் 29.5 சதவீதம் அதிகரித்ததாகச் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இறப்புகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப் படுதல் போன்ற பல அளவுகோல்களின் கண்காணிப்பின் அடிப்படையில், அடுத்த மாதம் கோவிட்-19 நோய்த்தொற்றின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.




