செர்டாங், டிச 28 - பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு தங்கள்
வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என பூச்சோங், தாமான் வாவாசான்
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை சுபாங் ஜெயா
மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதியில்
லேசான மண் நகர்வு கண்டறியப்பட்டுள்ளதால் ஆபத்துக்கான
சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்படுவதாகச்
சுபாங் ஜெயா துணை டத்தோ பண்டார் முகமது ஜூர்கர்னாய்ன் சே அலி
கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இரும்புத் தூண்களைக் கொண்டு தடுப்புகளை
அமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்
முதல் கட்டப் பணி வரும் ஜனவரி தொடக்கத்தில் முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஸ்ரீ
கெம்பாங்கான், பாஸார் ராயா சந்தைக்கு மேற்கொண்ட பணி நிமித்த
வருகையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
அப்பகுதியில் மண் நகர்வு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இரும்புத்
தூண்களைக் கொண்டு தடுப்புகளை அமைக்கும் பணியைத் தொடர்ந்து
மேற்கொள்ள வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் மொத்தம் 775 இரும்புத் தூண்கள் பதிக்கப்பட வேண்டிய
நிலையில் இதுவரை 375 தூண்கள் பதிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும்
தெரிவித்தார்.
கடந்த 16ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு
காரணமாக ஒன்பது வரிசை வீடுகளைச் சேர்ந்த 29 குடியிருப்பாளர்கள்
வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டனர்.




