ஷா ஆலம், டிச 28 - பொதுத் தேர்தலின் போது வாக்குறுதியளித்த படி தனது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் மற்றும் அலவன்சை சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் தொகுதியிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கினார்.
தொகுதியிலுள்ள பல்வேறு சமயத் தலங்களுக்கு மொத்தம் 332,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப் பட்டதாகப் பக்கத்தான் ஹராப்பான் பிரதிநிதியான அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசல்கள், சூராவ்கள், இந்து, பௌத்த ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தொகுதி மக்களுக்கு உதவுவது மற்றும் பரிவுமிக்க சமூகத்தை உருவாக்குவது ஆகிய பிரதான நோக்கங்களின் அடிப்படையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சுங்கை பூலோ தொகுதியிலுள்ள அனைத்து சமூகங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதில் இந்த உதவித் திட்டம் துணை புரியும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி.கே.ஆர். கட்சி பிரதிநிதியான டத்தோ ரமணன், சுங்கை பூலோ தொகுதியில் தாம் வெற்றி பெற்றால் தனது சம்பளம் முழுவதையும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் விதமாக அவர் பிரகடனக் கடிதத்திலும் கையெழுத்திட்டிருந்தார். அத்தேர்தலில் அவர் தேசிய முன்னணி வேட்பாளரான அம்னோவின் கைரி ஜமாலுடினை 2,693 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.




