குவாந்தான், டிச 28 - கிழக்குக்கரை விரைவுச் சாலையின் அமாட் ஷா பாலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று உயர்கல்விக் கழக மாணவர்களும் ஒரு பள்ளி மாணவனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
போலீசார் மோட்டார் சைக்கிள்களைக் கண்காணித்து 15 முதல் 22 வயதுடைய அம்மாணவர்களை தெமர்லோ மற்றும் மாரானில் உள்ள அவர்களின் வீடுகளில் கைது செய்ததாகத் தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹசான் கூறினார் .
யமாஹா YI5ZR ரக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய சந்தேக நபர்களுக்கு கை, கால்கள் உட்பட உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் நேற்றிரவு வெளியிட்டட அறிக்கையில் தெரிவித்தார்.
பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)ஆம் பிரிவின் கீழ் நான்கு சந்தேக நபர்களும் தெமர்லோ போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபரைப் போலீசார் இன்னும் தேடி வருவதாக மஸ்லான் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 09-271 6222 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கிழக்குக்கரை விரைவுச் சாலையில் சூப்பர்மேன் சாகசம் புரிந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் குழுவொன்று விபத்துக்குள்ளானதைச் சித்தரிக்கும்
28 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.




