கோலாலம்பூர், டிச 28 - இங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே நேற்று
முன்தினம் முதல் நடைபெற்று வரும் பாலஸ்தீனத்திற்கான
ஒருமைப்பாட்டு மறியல் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத்
திறந்துள்ளனர்.
காவல் துறையின் அனுமதியின்றி அந்த மறியலுக்கு ஏற்பாடு
செய்ததற்காக 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்தின் கீழ் இந்த
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக வங்சா மாஜூ மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.
“பாலஸ்தீனத்திற்கான முற்றுகை“ எனும் அந்த பேரணியின்
ஏற்பாட்டாளர்களை வாக்குமூலம் பதிவு செய்வதற்காகத் தாங்கள் இன்னும்
அழைக்கவில்லை எனக் கூறிய அவர், எதிவரும் ஞாயிற்றுக்கிழமை இந்த
பேரணி முடியும் வரை தாங்கள் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
பேரணியில் பங்கேற்றவர்கள் போலீசாரின் உத்தரவுகளைப் பின்பற்றி
நடப்பதோடு அப்பகுதியில் உள்ள சாலைகளையும் மறிக்கவில்லை.
இது தவிர போலீசார் அப்பகுதியில் 24 மணி நேரமும் சோதனை
மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
பேரணியில் பங்கேற்ற சிலர் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துள்ளது
குறித்து வினவப்பட்ட போது அந்த கூடாரங்கள் அமெரிக்க தூதரகத்திற்கு
எதிரே அமைக்கப்படாததால் அதனை அகற்றும் அதிகாரம் காவல்
துறைக்கு இல்லை என அவர் பதிலளித்தார்.
அந்த கூடாரங்கள் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்றார்
அவர்.
பாலஸ்தீனத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாக காரணமாக
இஸ்ரேலின் கோரத் தாக்குதலைக் கண்டித்து அரசு சாரா அமைப்பு சார்பில்
இந்த பேரணி நடத்தப்படுகிறது.




