பேங்காக், டிச 28 - மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் தாய்லாந்து-மலேசியா உறவுகளை மேலும் வலுப்படுத்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உறுதியளித்துள்ளார். இரு நாடுகளிலும் குறிப்பாக எல்லையில் உள்ள மக்களுக்கு உறுதியான நன்மைகள் மற்றும் மேம்பட்ட நல்வாழ்வைக் கொண்டுவருவதை அவரின் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புக்கெட் நகருக்கு நேற்று முன்தினம் தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருந்த மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தனது சமீபத்திய எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரையாடும் போதும், சாப்பிடும் போதும் இருந்த சூழல் மிகவும் நெருக்கமாகவும் நட்பாகவும் இருந்தது.
இந்த அரசாங்கம் தாய்லாந்து-மலேசியா உறவை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மேலும் நாடு மற்றும் மக்கள், குறிப்பாகத் தெற்கு எல்லைப் பகுதியில் வசிப்பவர்களின் நலனுக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம் என்று ஸ்ரேத்தா பதிவிட்டுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வற்றச் சந்திப்பின் போது தாமும் அன்வாரும் இருக்கும் மூன்று புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில், தாய்லாந்து-மலேசியா சுற்றுலா ஒத்துழைப்பை வலுப்படுத்த தாய்லாந்து உறுதிபூண்டுள்ளதாக ஸ்ரேத்தா கூறினார்.
தாய்லாந்திற்கு வார இறுதியில் வரும் மலேசிய சுற்றுப் பயணிகளின் சமீபத்திய அதிகரிப்பை சுட்டிக் காட்டிய அவர், இந்த எண்ணிக்கை சராசரி 10,000 முதல் 30,000 பேர் வரை அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் தாய்லாந்து சுற்றுப் பயணிகளை ஈர்க்க ஈர்க்க மலேசியா விருப்பம் தெரிவித்ததாகவும் ஸ்ரேத்தா தெரிவித்தார்.
இந்த ஒருமித்த இலக்கைக் கட்டியெழுப்புவதன் மூலம் தங்களின் ஒருங்கிணைந்த சுற்றுலாத் திறனைப் பயன்படுத்தி வட மலேசியா மற்றும் தென் தாய்லாந்தில் சுபிட்சத்தை மேம்படுத்துவதோடு பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் இரு நாடுகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.




