ஷா ஆலம், டிச 27: பகாங் மற்றும் ஜொகூரைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் நாளை வரை எச்சரிக்கை மட்டத்தில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகாங்கின் குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின் பகுதிகளிலும் ஜொகூரில் செகாமட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு ஆகிய இடங்களிலும் மழை பெய்யும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது.
இதற்கிடையில், கிளந்தான், பகாங் மற்றும் சபாவில் உள்ள தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சம் அடைந்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை தொடர்ந்து அதிகரித்ததுள்ளது.
திரங்கானுவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில் ஜொகூரில் எந்த மாற்றமும் இல்லை.
இன்று அதிகாலை பகாங்கில், குவாந்தன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமீபத்திய இடமாக மாறியது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து 101 குடும்பங்களைச் சேர்ந்த 398 நபர்களாக உள்ளது.
இதற்கிடையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி ஜொகூரில் கம்போங் ஓராங் அஸ்லி பேட்டா, மெர்சிங் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 25 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 15 அன்று, மெட் மலேசியா தீபகற்பத்தின் தெற்கிலும் சபாவின் வடக்கிலும் பருவமழை பெய்யும் என்று கணித்துள்ளது. அதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும்.




