NATIONAL

வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்ய பிரதமர் நாளை கிளந்தான் பயணம்

27 டிசம்பர் 2023, 11:49 AM
வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்ய பிரதமர் நாளை கிளந்தான் பயணம்

கோலாலம்பூர், டிச 27- கிளந்தான் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தை  நேரில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

தாய்லாந்தின் புக்கெட்டில் நேற்று அந்நாட்டுப்  பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை சந்தித்தப் பின்னர் தனது முகநூலில் வெளியிட்ட பதிவொன்றில் அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.

நாங்கள் தற்போதைய வெள்ள நிலைமை குறித்து பேசினோம். இறைவனின் சித்தம் இருந்தால்  நாளை நான் கிளந்தானுக்குச் சென்று அங்கு அதிகரித்து வரும் வெள்ள சூழ்நிலையைப் பார்வையிடுவேன் என்று அவர் சொன்னார்.

இதனிடையே , நேற்றிரவு  4,967 குடும்பங்களைச் சேர்ந்த  15,994 பேராக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  இன்று காலை 8 மணியளவில்   5,510 குடும்பங்களைச் சேர்ந்த 17,466 பேராக உயர்வு கண்டதாக கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் இன்று தெரிவித்துள்ளது.

பாசீர் மாஸ், தானா மேரா, ஜெலி, குவா மூசாங், கோல கிராய், மச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோத்தா பாரு ஆகிய எட்டு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 89 நிவாரண மையங்களில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதற்கிடையில், ஸ்ரேத்தாவுடனான  சந்திப்பின் போது மலேசியா மற்றும் தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது  உள்பட   பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்ததாக அன்வார் சொன்னார்.

தாய்லாந்திற்கு வரும் மலேசிய சுற்றுப் பயணிகளின் திடீர் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு புக்கெட் மற்றும் லங்காவி ஆகியவற்றோடு நாட்டின் வடக்கில் உள்ள  பிற பகுதிகளிலும்  சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து கொண்டுள்ள விருப்பத்தை  பிரதமர் ஸ்ரேத்தா வெளிப்படுத்தினார் என் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.