கோலாலம்பூர், டிச 27- பாதுகாவலர் ஒருவர் தவறுதலாகச் சுட்டதில் நிதி
நிறுவனம் ஒன்றின் கண்ணாடிக் கதவு உடைந்து நொறுங்கியது.
இச்சம்பவம் கோத்தா டாமன்சாரா, ஜாலான் பி.ஜே.யு.5/14 இல் நேற்று
காலை நிகழ்ந்தது.
எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை
என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணைப் போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் எம். ஹூசேன் சோலாவுடின் கூறினார்.
சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் வேட்டுச் சத்தம் எழுந்ததைக் கேட்ட
பொது மக்கள் இது குறித்து காலை மணி 10.13 அளவில் காவல் துறைக்குத்
தகவல் கொடுத்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று
சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது. அங்கு காவல் பணியில்
ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவர் தன்னிடமிருந்து பம்ப் கன் வகை
துப்பாக்கியின் விசையை தவறுதலாக அழுத்தியதால் அந்த நிதி
நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிக் கதவு உடைந்தது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் சொன்னார்.
இது கொள்ளை முயற்சியல்ல எனக் கூறிய அவர், பாதுகாவலரிடம்
நடத்தப்பட்ட சோதனையில் அவர் போதைப் பொருளை
பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டதின் 39வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டார்.




