அலோர் ஸ்டார், டிச. 19 - கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களில் உள்ள நகைக் கடைகளில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சுடும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கும்பலின் தலைவன் உட்பட மூவர் கடந்த செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டனர்.
அந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ததன் மூலம் மூன்று மாநிலங்களில் நிகழ்ந்ததாக புகார் செய்யப்பட்ட ஏழு கொள்ளைச் சம்பவங்களுக்கு தாங்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளதாகக் கெடா துணை போலீஸ் தலைவர் டத்தோ அபு சாமா முகமது நூர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, இங்குள்ள ஜாலான் லங்காரில் உள்ள நகைக் கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்ததாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறி அவர், பம்ப் கன் மற்றும் கோடரியைப் பயன்படுத்தி 178,000 வெள்ளி மதிப்புள்ள 32 தங்கச் சங்கிலிகளை ஆடவன் ஒருவன் கொள்ளையிட்டுத் தப்பினான் என்றார்.
இதனைத் தொடர்ந்து தீவிர புலனாய்வை மேற்கொண்ட கெடா மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் டி9 பிரிவு கடந்த செவ்வாய்கிழமை அலோர் ஸ்டார் பகுதியில் 54 வயதுடைய சந்தேக நபரை கைது செய்தது என அவர் தெரிவித்தார்.
அனைத்துக் கொள்ளைச் சம்பவங்களுக்கும் இந்நபரே மூளையாகவும் முக்கிய சந்தேக நபராகவும் இருந்துள்ளார் என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
கெஸெபோ வியாபாரத்தை நடத்தி வந்த அந்த சந்தேக நபர், தனியாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதோடு கடந்த 2009 ஆம் ஆண்டில் மட்டும் ஒரே தடவை கும்பலாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் அவர் கூறினார்.
இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் பினாங்கு வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் திருடப்பட்ட நகைகளை வாங்கியவர்கள் என நம்பப்படும் 52 மற்றும் 54 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.
சந்தே நபரிடமிருந்த ஒரு பம்ப் கன், மூன்று கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஒரு கோடரி, தங்கத்தை உருக்கும் இயந்திரம், ஒரு புரோட்டான் வீரா கார் மற்றும் 5,500 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சந்தேக நபர்கள் அனைவரும் இன்று வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.




