கோலாலம்பூர், டிச 19 - நாட்டில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த
வழக்குகளில் வாதாடிய பிரபல மூத்த வழக்கறிஞர் டத்தோ சுலைமான்
அப்துல்லா நேற்று தனது 77வது வயதில் காலமானார்.
சுலைமானின் மறைவை உறுதிப்படுத்திய அவரின் புதல்வர் ஹுஸிர்,
அண்மைய ஆண்டுகளாகக் கடுமையான உடல் நலப்பிரச்சனையை
எதிர்நோக்கிய போதும் அவர் கூரிய சிந்தனையாற்றலுடன் செயல்பட்டு
வந்ததாகச் சொன்னார்.
அவர் தொடர்ந்து பல வழக்குகளில் ஆஜராகி வந்ததோடு பல்வேறு
செயல்குழுக்கள் மற்றும் ஆலோசக மன்றங்களில் இடம் பெற்றிருந்தார்
என அவர் தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்
ரசாக் சம்பந்தப்பட்ட எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட்
வழக்கில் தலைமை வழக்கறிஞராகச் சுலைமான் நியமிக்கப்பட்டிருந்தார்.
மூத்த வழக்கறிஞரான அவர் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின்
தலைவராக 2000 முதல் 2001 வரை பதவி வகித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட வழக்கிலும் அவரின் வழக்கறிஞராகச்
சுலைமான் செயல்பட்டார்.
இதனிடையே, சுலைமான் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்ட
அன்வார், நீதித் துறை கோட்பாடுகள் மற்றும் மனித உரிமை மீது அவர்
மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்று வர்ணித்தார்.




