ஷா ஆலம், டிச 19 - கோவிட்-19 நோய்த் தொற்று தற்போது அதிகரித்து
வரும் நிலையில் தடுப்பு மற்றும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம்
காட்டும்படி சிலாங்கூர்வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் குறிப்பாக மூடப்பட்ட மற்றும் மக்கள் நடமாட்டம்
மிகுந்த பகுதிகளில் முகக்கவரி அணிவது போன்ற சுயப் பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும் என மாநில அரசின்
பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி
கூறினார்.
இது தவிர நோய்க்கான அறிகுறி தென்படும் அல்லது நோய் பீடிக்கும்
பட்சத்தில் ‘ட்ரிஸ்‘ ( பரிசோதிப்பது, தகவல் அளிப்பது, தனிமைப்படுத்திக்
கொள்வது மற்றும் சிகிச்சைப் பெறுவது) நடைமுறையை அமல்
செய்வதும் கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டார்.
சுய பாதுகாப்புக்குப் பொது மக்கள் முக்கியத்தும் அளிக்கும் அதே
வேளையில் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். கோவிட்-19
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மூன்று ஆண்டுளாக
நாம் நிறைய படிப்பினையைப் பெற்றுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக
விளங்குகிறது. ஆகவே, சமூக இடைவெளி என்பது இங்கு குறிப்பாகப்,
பேரங்காடிகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் பெரும்பாலும்
வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது என்றார் அவர்.
இது தவிர, தற்போது பள்ளி விடுமுறையாக உள்ளதால் திருமணம், ஒன்று
கூடும் நிகழ்வுகள் அதிகம் நடைபெறுவதோடு பொழுது போக்கு
மையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். ஆகவே பொது
மக்கள் நடப்புக் சூழலைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 நோய்த்
தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.




