புத்ராஜெயா டிச 19 - போதைப் பொருளை வைத்திருந்த இரு
குற்றச்சாடுகளில் தனக்கு விதிக்கப்பட்ட தலா 10 பிரம்படித்
தண்டனைகளை ஏகக்காலத்தில் நிறைவேற்றக் கோரி முன்னாள்
பட்டுவாடா பணியாளர் ஒருவர் செய்து கொண்ட மனுவை இங்குள்ள
கூட்டரசு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
முகமது ஷூக்ரான் ரம்லி என்ற அந்த ஆடவரின் மேல் முறையீட்டு
மனுவை ஏகமனதாக தள்ளுபடி செய்த நீதிபதி டத்தோஸ்ரீ ஹஸ்னா
முகமது ஹஷிம் தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு, ஒவ்வொரு
குற்றச்சாட்டுக்கும் தலா 10 பிரம்படி தனித்தனியாக வழங்கப்பட வேண்டும்
என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் வழி அந்த ஆடவருக்கு மொத்தம் 20 பிரம்படிகள் வழங்கப்படும்.
பிரம்படித் தண்டனையை ஏகக்காலத்தில் நிறைவேற்றக் கோரும் மனுவை
விவேகத்திற்கு உட்பட்டு அனுமதிப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக
நீதிமன்றம் கருதவில்லை என்று நீதிபதிகள் டத்தோ மேரி லிம் மற்றும்
டத்தோ அபு பாக்காருடன் இந்த வழக்கை செவிமடுத்த நீதிபதி ஹஸ்னா
தனது தீர்ப்பில் கூறினார்.
முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சட்டத் துறைத் தலைவர்
அலுவலகத்தில் செய்து கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில்
அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்த நீதிபதிகள் குழு
கடந்த நவம்பர் 21ஆம் தேதி ரத்த செய்து அதற்குப் பதிலாக 10 ஆண்டுச்
சிறைத்தண்டனையும் இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 பிரம்படிகளும்
விதித்து தீர்ப்பளித்திருந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் பெந்தோங், தெலேமோங் காவல் நிலையம் அருகே 22.0 கிராம் மற்ற 76.61 கிராம் ஹெரோயின் மற்றும் மோனோசெத்தில்மோர்பைன் போதைப் பொருளை வைத்திருந்ததாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.




