கோலாலம்பூர், டிச18: சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் கோவிட்-19 சம்பவங்கள் செய்திகள் அதிகரிப்பைத் தொடர்ந்து அனைத்து மலேசியர்களும் கட்டாயப் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
தற்போது கோவிட் -19 யின் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைக் குறிப்பாக எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு வழங்குவதை சுகாதார அமைச்சகம் ஊக்குவிக்கிறது என ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி தெரிவித்தார்.
"இது சமூக ஊடகங்களால் ஏற்பட்ட தவறான புரிதல். நாங்கள் தகவலைப் பரப்புவதற்கு முன்பு வெளியிடப்பட்ட செய்திகளின் உள்ளடக்கம் உண்மையானதா என்பதை முதலில் சரிபார்க்க பரிந்துரைக்கிறேன், `` என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மலேசியாவின் தேசிய செய்தி நிறுவனத்திற்கும் (பெர்னாமா) சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் (MoA) கையெழுத்திடும் விழாவை நேரில் பார்த்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான சிக்கலைத் தெளிவுபடுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள நாழிதழ்கள் மற்றும் ஊடகங்களின் தலைமை ஆசிரியருடன் ஒரு சந்திப்பை நடத்த பரிந்துரைப்பதற்காகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுல்கேப்ளி அஹ்மட்டை சந்திக்கவுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.
- பெர்னாமா




