NATIONAL

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெ.4.4 கோடி  மதிப்புள்ள ஃபெந்தானில் போதைப் பொருள் பறிமுதல்

18 டிசம்பர் 2023, 8:34 AM
கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெ.4.4 கோடி  மதிப்புள்ள ஃபெந்தானில் போதைப் பொருள் பறிமுதல்

நீலாய், டிச 18 -  அரச மலேசிய  சுங்கத் துறை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சிப்பாங்கிலுள்ள  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) சரக்கு முனைய வளாகத்தில் 4 கோடியே 44 லட்சம் வெள்ளி  மதிப்புள்ள 807.9 கிலோகிராம் ஃபெந்தானில் வகை ஆபத்தான போதைப் பொருளைக் கைப்பற்றியது.

அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட  சோதனையில் 72 அலுமினிய போத்தல்கள் அடங்கிய  36 பெட்டி திரவமயப் போதைப் பொருளை தாங்கள்  பறிமுதல் செய்ததாகச் சுங்கத் துறை துணை இயக்குநர் (அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு) டத்தோ சசாலி முகமது தெரிவித்தார்.

மார்ஃபின் போதைப் பொருளை விட 100 மடங்கு ஆபத்தான மற்றும் ஹெராயினை விட 20 முதல் 40 மடங்கு வலிமை வாய்ந்த இந்த வகை போதைப்பொருளை சுங்கத் துறை பறிமுதல் செய்தது இதுவே முதல் முறையாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த கொடிய வகை போதைப் பொருளுடன் சைலாசின் வகை மருந்தைக் கலந்து கொடுத்தால் மனிதர்கள் ஜோம்பி போல் ஆகிவிடுவார்கள். இது  நாட்டில் பரவினால் அது மிகவும் ஆபத்தானதாகும். ஆயினும் இந்த போதை மருந்து  மலேசிய சந்தைக்கானது அல்ல  என்று அவர் இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த போதை மருந்து இந்தியாவின் மும்பை அனைத்துலக  விமான நிலையத்திலிருந்து  விமானம் மூலம் கே.எல்.ஐ.ஏ. சரக்கு முனையத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர்  துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

இது  வாசனை கலவை என்று  பொய்யாகப் பிரகனப்படுத்துவது  இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் வழக்கமான பாணியாகும் என  சசாலி கூறினார்.

இந்த போதைப் பொருளின் எடையின் அடிப்படையில் மதிப்பிடுகையில் சுமார் நாற்பது லட்சம் போதைப் பித்தர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் தாங்கள் வெற்றியடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.