கோலாலம்பூர், டிச.17 - கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து 0.6 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் பூச்சோங்- டாமன்சாரா நெடுஞ்சாலையில் (எல்.டி.பி.) கடுமையான வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வாகனமோட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.
அந்த நெடுஞ்சாலையின் 21.5 கிலோ மீட்டரில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பில் இரவு 7.00 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
அந்த இடத்தில் இரண்டு அடி உயரத்திற்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டு சாலைத் தடுப்பு நீரில் மூழ்கியது. எனினும், எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தண்ணீர் வடியத் தொடங்கியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பல காணொளிக் காட்சிகள் நெடுஞ்சாலையை ஒட்டிய பேரங்காடியில் சுமார் மூன்று அங்குலத்திற்கு நீர் சூழ்ந்துள்ளதைக் காட்டியது.
இதற்கிடையில், சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு நேற்று மாலை 6.45 மணியளவில் மூன்றாம் நிலை அபாய எச்சரிக்கையை விடுத்ததுடன் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் உதவிப் பணிக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.








