ஈப்போ, டிச 15 - சாலை விபத்தில் கொல்லப்பட்ட மலாயான் புலியின்
உடலை பதப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்மாதம் 9ஆம் தேதி வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் குவா
தெம்புரோங் ஓய்வு பகுதிக்கு அருகில் அந்த புலி டிரெய்லர் லோரியினால்
மோதப்பட்டது.
சுங்கை நகரில் உள்ள தேசிய வன விலங்கு மீட்பு மையத்தில் அப்புலியை
பதப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இப்பணி
முற்றுப் பெற ஐந்து மாதம் பிடிக்கும் என்றும் பேராக் மாநில வன
விலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறை இயக்குநர் யூசுப் ஷாரிப்
கூறினார்.
பொது மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்துவது உள்பட பல்வேறு
காரணங்களுக்காக அந்த புலியின் உடலை பாடம் செய்யும்
நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
புலியின் உடலைப் பதப்படுத்தும் பணியை மிகவும் கவனமாக மேற்கொள்ள
வேண்டியுள்ளது. ஏனென்றால், பாடம் செய்யப்படும் உடல் பார்ப்பதற்கு
நேர்த்தியாகவும் நீண்ட நாட்கள் கெடாமலும் இருப்பதை உறுதி செய்ய
வேண்டியுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, இறந்த அந்த புலியின் மீசையைப் பிடுங்கிச் சென்ற
நபர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் தமது துறை தீவிரமாக ஈடுபட்டு
வருகிறது என்று யூசுப் தெரிவித்தார்.
அந்த புலியின் மீசையைப் பிடிங்கியவர்களையும் அதன் சம்பவத்தை
கைபேசியில் பதிவு செய்தவர்களையும் கண்டறியும் முயற்சியில்
கோலாலம்பூரில் உள்ள பெர்ஹிலித்தான் சிறப்புக் குழு ஈடுபட்டு வருகிறது
என அவர் சொன்னார்.




