ஷா ஆலம், டிச 14: நேற்று மதியம் பெய்த கனமழையைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் கோலா சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஜெயா செத்தியா தேசியப் பள்ளி மற்றும் பாரிட் மஹாங் பாலாய் ராயா ஆகிய தற்காலிகத் தங்கும் மையங்களில் தங்கியுள்ளதாக மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.
கம்போங் சுங்கை செலிசெக், உலு சிலாங்கூரில் உள்ள சுங்கை பெர்ணம் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளதாகவும் (27.1 மீட்டர்), ஆனால், இன்று காலை 9 மணி நிலவரப்படி குறையும் போக்கில் இருப்பதாகவும் publicinfobanjir.water.gov.my என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
– பெர்னாமா




