கோலாலம்பூர், டிச 14 - விமான பழுதுபார்ப்புப் பயிற்சியை அலைட்
ஏரோநோட்டிக்ஸ் டிரெயினிங் சென்டரில் (ஏ.ஏ.டி.சி.) மேற்கொண்டு வரும்
32 மாணவர்கள் இவ்வாண்டிற்கான பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்துவதில்
மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவின்
உதவியைப் பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்தில் பங்கு கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40
பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பயிற்சிக் கட்டணப் பாக்கியைச்
செலுத்துவதற்கு மித்ரா ஐந்து லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிட்டதாக
அந்த பிரிவின் பொருளாதார மற்றும் தொழில பிரிவு இயக்குநர்
ஆர்.சுரேஷ் கூறினார்.
அந்த பயிற்சி மையத்தில் பயின்று வரும் 51 மாணவர்களில் 32 பேருக்கு
ப்யிற்சிக் கட்டணத்தை செலுத்துவதற்காக 506,428 வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்பட்டது. அம்மாணவர்களில் பெரும்பாலோர் பயிற்சியை முடிக்கும்
தறுவாயில் உள்ளதோடு மேலும் சில தொழில் சார்ந்த பயிற்சியில்
ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
குடும்பப் பின்னணி தவிர்த்து, அம்மாணவர்கள் விமான பராமரிப்பு
லைசென்சைப் பெறுவதற்கு ஏதுவாக 18 மாதங்களுக்குள் 12 பாடத்
திட்டங்களில் ஆறை நிறைவு செய்ய வேண்டும் என நிபந்தனை
விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
வேலை வாய்ப்புகளையும் நல்ல வருமானத்தையும் தரக் கூடிய
துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உதவும் திட்டங்களை மித்ரா
தொடர்ந்து அமல்படுத்தும் என்றும் சுரேஷ் சொன்னார்.




