ரவாங், டிச 13 - அடுக்குமாடி கார் நிறுத்தமிட கட்டுமானப் பணியில்
ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று விழுந்ததில் சேதமடைந்த ரவாங் இரயில்
தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இந்த பணி 24 மணி நேரத்தில் முழுமையடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்தில் அறுந்து விழுந்த கேபிள்களை சரி செய்வது, பழுதடைந்த
உபகரணங்களை மாற்றுவது மற்றும் தண்டவாளத்தின் மேல் இணைப்பில்
மின் விநியோகக் சோதனையை மேற்கொள்வது ஆகிய பணிகள் தற்போது
மேற்ககொள்ளப்பட்டு வருவதாகக் கும்புலான் கெரேத்தாப்பி தானா மிலாயு
பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி
டத்தோ முகமது ரானி ஹிஷாம் சம்சுடின் கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் இரு இரயில் தடங்களும்
பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவை அல்ல என உறுதி
செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தின் மேல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பின்
மதிப்பு தற்போது ஆராயப்பட்டு வருகிறது. என்ற சம்பவ இடத்தில்
செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் சொன்னார்.
ரவாங்-குவாங் இடையிலான இரயில் தடத்தின் 355.749வது கிலோ
மீட்டரில் நேற்று மாலை 5.33 மணியளவில் இந்த கிரேன் விழுந்ததாகக்
கூறிய அவர், இதனால் தண்டவாளத்தின் மேல் பகுதியில் உள்ள மின்சாரக்
கேபிள்கள் அறுந்து விழுந்தன என்றார்.
இந்த விபத்தில் பயணிகள் மற்றும் இரயில் பணியாளர்களுக்கு காயம்
எதுவும் ஏற்படவில்லை. எனினும், கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பாகக்
கே.எல். சென்ட்ரல் மற்றும் தஞ்சோங் மாலிம் இடையிலான இ.டிஎஸ். மின்சார இரயில் மற்றும் கேடிஎம் பயணிகள் இரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது என்றார் அவர்.




