கோலாலம்பூர், டிச 12 - மத்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளப்படி, மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மலாய் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம்.
எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் உட்பட பல சோதனை செயல்முறைகள் மூலம் விண்ணப்பதாரர்களின் மொழிப் புலமை சோதிக்கப்படும் என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா கூறினார்.
“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 16ன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் மலாய் மொழியில் உரையாட அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும், அதே சமயம் பிரிவு 19ன் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள் மலாய் மொழியைப் பற்றிய போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இன்று நாடாளுமன்றத்தில் (செனட்) கேள்வி-பதில் அமர்வின் போது, "இது மத்திய அரசியலமைப்பில் குறிப்பிடப் பட்டுள்ளதால், குடியுரிமை விண்ணப்பதாரர்களுக்கு மலாய் மொழியின் தேர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அவர் பதிலளித்தார்.
மலேசிய குடியுரிமை அந்தஸ்து பெறுவதில் மலாய் மொழியின் அமலாக்கத்திற்கு எந்த அளவிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை அறிய விரும்பிய செனட்டர் அப்துல் நாசிர் இட்ரிஸின் துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நவம்பர் மாத நிலவரப்படி, உள்துறை அமைச்சகம் (கேடிஎன்) 32,000 குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று ஷம்சுல் கூறினார்.
"அக்டோபர் வரை, குடியுரிமை விண்ணப்பங்களுக்கான கேடிஎன் மொத்தம் 10,381 முடிவுகளை வெளியிட்டது. இது ஆண்டு இலக்கான 10,000ஐ விட அதிகமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
- பெர்னாமா




