NATIONAL

தீயணைப்பு, மீட்பு பணிகளுக்கு உதவும் ரோபோ- தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடிப்பு

4 டிசம்பர் 2023, 8:41 AM
தீயணைப்பு, மீட்பு பணிகளுக்கு உதவும் ரோபோ- தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடிப்பு

பாகான் செராய், டிச 4:- தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் அதேவேளையில் அப்பணிகளின் போது  காயம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக  பாகான் செராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் 'செராய் கோர்கன் 1' (SG1) எனப்படும் ரோபோவை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோவை உருவாக்கும் பணி  கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கிய வேளையில் நிலையத்தின்  ஆறு உறுப்பினர்களின் ஆக்கத் திறன் வாயிலாக இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது என்று பாகான் செராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அகமது நூர் சியாம்சி ஜைனோல்டின் கூறினார்.

71 கிலோகிராம் எடையுள்ள இந்த ரோபோவை தயாரிப்பதற்கு  சுமார் 11,000 வெள்ளி செலவு பிடித்ததாகக் கூறிய அவர், சுமார்  90 சதவீதம் இரும்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்சார பொருட்களைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டது என்றார்.

தீயணைப்பு மற்றும்  மீட்பு நடவடிக்கைகளின் போது தீயணைப்பு வீரர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் காயம் மற்றும் இறப்பு அபாயம் போன்றவை இந்த ரோபோவைக் கண்டு பிடிப்பதற்கான தூண்டுகோலாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

இந்த ரோபோவின்  திறன் மற்றும் அதன்  நீடித்த நிலைத்தன்மையை மதிப்பிடுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசிய தரநிலை மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (சிரிம்) மற்றும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகிய தரப்பினருடன்  தாங்கள் ஒத்துழைத்ததாக  அவர் கூறினார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளின் முடிவில் இந்த ரோபோ  300 டிகிரி செல்சியஸ்  வரையிலான வெப்ப நிலையைத் தாங்க முடியும் என்பதோடு மீட்புப் பணியின் போது அதிகபட்சமாக 250 கிலோ எடையைத் தூக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது என அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.