ஷா ஆலம், நவ 30 - சிலாங்கூர் பருவநிலை மாற்ற நடவடிக்கை மன்றம் விரைவில் பருவநிலை மாற்ற ஏற்பு மையமாக தரம் உயர்த்தப்படும். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் மீது அரசாங்கம் செலுத்தி வரும் தீவிர கவனத்தின் வெளிப்பாடாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்த மையம், சுமார் 800,000 வெள்ளி செலவில் உருவாக்கப்படும் இந்த மையம் பருவநிலை மாற்றப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வியூக நடவடிக்கைகளை உருவாக்கும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
நீர் ஆதாரங்கள், விவசாயம், சுகாதாரம், நில பயன்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஒன்பது முக்கிய துறைகள் மீது இந்த மையம் கவனம் செலுத்தும்.
வனவியல் மற்றும் பல்லுயிர்த் துறைகள், தொழில்துறை, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை இம்மையம் கருத்தில் கொள்ளும் இதர அம்சங்களாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சனைகளுக்கு தீவிர கவனம் தேவை என்பதை மாநில அரசு உணர்ந்த பிறகு இந்த மையத்தை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனவே, வியூகத் திட்டங்களை வகுக்க செயல்படும் மையம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.
பசுமை தொழில்நுட்பம், கார்பன் சந்தை மேலாண்மை, தனியார் சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான திட்டப் பரிந்துரை மதிப்பீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு முன்னணி நிறுவனமாகவும் இது செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் பருவநிலை மாற்றக் கொள்கை அமலாக்கத்திற்கும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான விரிவான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் தேவையான பொருத்தமான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில அரசு இவ்வாண்டு 300,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.




