கோலாலம்பூர், நவ 30- காஜாங் எம்.ஆர்.டி. தடத்தில் இரயில் ஒன்றில்
வெடிப்பு அல்லது தீச்சம்பவம் ஏற்பட்டதாக சமூக ஊடங்களில் பரவலாகப்
பகிரப்படும் தகவலில் உண்மை இல்லை என்று ரெப்பிட் கே.எல். நிறுவனம்
தெளிவுபடுத்தியுள்ளது.
தாமான் முத்தியாரா நிலையத்தில் சேவையிலிருந்து மீட்டுக்
கொள்ளப்பட்ட 28 எண் கொண்ட இரயிலிருந்து உண்டான தீப்பொறியின்
சத்தமே அது என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது. தாமான்
முத்தியாரா நிலையத்திற்கு அருகிலுள்ள தடங்களில் மின்விநியோக
முறையில் எச்சரிக்கை சமிக்ஞை ஏற்படக் காரணமாக இருந்த
காரணத்திற்காக அந்த இரயில் சேவையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இரயில் சேவையிலிருந்து மீட்டுக்
கொள்ளப்பட்டு பயணிகள் வேறு இரயில்களுக்கு மாற்றப்பட்டனர்.
இச்சம்பவம் காரணமாக ஏற்பட்ட தீப்பொறி ஒலியை உண்டாக்கியதாக
கூறிய அந்நிறுவனம் அங்கு வெடிப்பு அல்லது தீச்சம்பவம் எதுவும்
நிகழவில்லை என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
காஜாங் தடத்திற்கான எம்.ஆர்.டி. சேவையில் எந்த தடங்கலும்
ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இரயில் உள்ள அதிகாரி தீவிர
கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அது தெரிவித்தது.
முன்னதாக, அந்த இரயிலில் ஏற்பட்ட வெடிச் சத்தம் காரணமாக
பயணிகள் பீதியடைந்ததாக சமூக ஊடங்களில் செய்திகள் பரவின.




