கோலாலம்பூர், நவ. 27- இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று 54 வயதை எட்டிய ஊழியர் சேம நிதி வாரிய (இ.பி.எஃப்.) உறுப்பினர்களில் சுமார் 35 விழுக்காட்டினர் 10,000 வெள்ளிக்கும் குறைவான சேமிப்பைக் கொண்டுள்ளனர் என்று துணை நிதியமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
இந்த பிரிவில் உள்ள 94,827 உறுப்பினர்களின் மொத்த ஆயுள் காலச் சேமிப்பு 24 கோடியே 61 லட்சம் வெள்ளியாகும் என்று அவர் சொன்னார்.
10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான சேமிப்பைக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2.0 விழுக்காடு அல்லது 4,877 பேராக மட்டுமே உள்ளது. இவர்கள் மொத்தமாக 79 லட்சம் வெள்ளியை சேமிப்பாக வைத்திருக்கிறார்கள்.
இவ்வாண்டு ஜனவரி 1, 2023 நிலவரப்படி, 54 வயதிற்குட்பட்ட 274,715 உறுப்பினர்கள் அல்லது 1.57 கோடி மொத்த இ.பி.எஃப். சந்தாதாரர்களில் 1.7 விழுக்காட்டினரின் மொத்த சேமிப்பு 357 கோடியே 20 லட்சமாகும் என்று அவ கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று 54 வயதை அடைந்த இ.பி.எஃப். உறுப்பினர்களின் சேமிப்பு விகிதாசாரம் குறித்து கோல சிலாங்கூர் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சிம் இவ்வாறு தெரிவித்தார்.
54 வயதுடைய இ.பி.எஃப். உறுப்பினர்களில் 8 விழுக்காட்டினர் வெ.10,001 முதல் வெ.20,000 வரையிலும் 13 சதவிகிதம் பேர் வெ.20,001 முதல் வெ.50,000, வரையிலும், 12 சதவிகிதம் பேர் வெ.50,001 மற்றும் வெ.100,000 வரையிலும் சேமிப்பைக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.








