ஷா ஆலம், நவ 28- அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக
நாடு முழுவதும் 8,481 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மொத்தம் 5,063 பள்ளிகள், 2,457 மண்டபங்கள், 572 சூராவ் மற்றும்
பள்ளிவாசல்கள், 389 சமூக மையங்களை உள்ளடக்கிய இந்த வெள்ள
நிவாரண மையங்களில் 16 லட்சத்து 20 பேர் வரை அடைக்கம் பெற
முடியும் என்று அவர் மக்களவையில் இன்று சொன்னார்.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் குழப்ப நிலை நிலவுவதை தவிர்க்கும்
விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்ட
பகுதிகளில் மோமான விளைவுகள் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படாத
போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போது முதல்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் வெள்ள அபாயம் உள்ள 5,648 இடங்களை வடிகால்
மற்றும் நீர் பாசனத் துறை அடையாளம் கண்டுள்ளது. வெள்ள ஆபத்தை
தணிக்கும் விதமாக பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 66,169 அதிகாரிகள் மற்றும்
உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மீட்பு
பணிகளுக்கு உதவக்கூடிய 25,440 உபகரணங்களும் தயார்
படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதனிடையே, வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்காக மாநிலம்
முழுவதும் 1,152 தற்காலிக நிவாரண மையங்களை சமூக நலத்துறை
ஆர்ஜிதம் செய்துள்ளதாகப் பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிம் கடந்த 15ஆம் தேதி கூறியிருந்தார்.
அந்த நிவாரண மையங்களில் முறையான வழிகாட்டிகள் தயார்
செய்யப்பட்டுள்ளதோடு சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கியவர்களை
கவனிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.




