கோலாலம்பூர், நவ. 28: ஒன்பது மாநிலங்களில் முன்னோடித் திட்டங்களுடன் நிரந்தர பேரிடர் மீட்பு மையங்கள் (PPKB) விரைவில் நிறுவப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நிரந்தர பேரிடர் மீட்பு மையங்கள் ஒவ்வொன்றும் RM5 மில்லியன் உச்சவரம்பு செலவை உள்ளடக்கியது மற்றும் தற்காலிக தங்கும் மையங்களை (PPS) ஒப்பிடும்போது வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இது இருக்கும் என்றார்.
"ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தை எதிர்கொள்கிறோம், தற்காலிகத் தங்கும் மையங்களை உருவாக்குவது நியாயமற்றது, அதனால்தான் நிரந்தர பேரிடர் மீட்பு மையங்களை உடனடியாக நிறுவ அரசாங்கம் முடிவு செய்தது.
"எனவே, இந்த மையங்களை சமூக நடவடிக்கை மையமாகவும் பயன்படுத்தலாம் (வெள்ள காலத்திற்குப் பிறகு). ஆனால், வெள்ளத்தை சமாளிக்க இது சிறந்தது" என இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
நாடு முழுவதும் தற்காலிகத் தங்கும் மையங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் செயல்களும் அரசாங்கத்திடம் உள்ளதா என்று டத்தோ ஷம்சுல்கஹர் முகமட் டெலியின் (பிஎன் - ஜெம்போல்) கூடுதல் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
- பெர்னாமா




