ஷா ஆலம், நவ 27- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் நடந்த கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் கூட்டு துப்புரவு இயக்கத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்றனர்.
ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு வட்டார மக்களைத் தயார்படுத்தும் நோக்கிலான இந்த துப்புரவு இயக்கத்திற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த துப்புரவு இயக்கம் ஏ மண்டலம் (ஜாலான் 25/1 - ஜாலான் 25/35), பி மண்டலம் (ஜாலான் 25/36 - 25/67, ஜாலான் 25/116 - 25/118) சி மண்டலம் (ஜாலான் 25/68 - ஜாலான் 25/97) மற்றும் டி மண்டலம் D (ஜாலான் 25/95 - ஜாலான் 25/150) ஆகிய நான்கு பகுதிகளில் ஏககாலத்தில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையின் மாற்றத்தினால் ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட எந்த சாத்தியத்தையும் எதிர்கொள்ளும் வகையில் இந்த துப்புரவு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாக செக்சன் 25 தாமான் ஸ்ரீமூடா விளங்குவதால் இந்த துப்புரவு இயக்கத்திற்கு இப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது என அது கூறியது.
குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்கள் பாதுகாப்பானவையாகவும் வசிப்பதற்கு உகந்த சூழலைக் கொண்டவையாகவும் இருப்பதை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என மாநகர் மன்றம் குறிப்பிட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மன்றம், ட்ஸி சீ அறவாரியம், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், எம்.எஸ்.யு. பல்கலைக்கழகம், விஸ் மெகாட்ரோனிக் கல்லூரி ஆகியவற்றின் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், ஊராட்சி மேம்பாட்டு அமைச்சு, சிலாங்கூர் மாநில பொதுப்பணித் துறை, நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அரச மலேசிய காவல்துறை மற்றும் கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் ஆகியவையும் இந்த துப்புரவு இயக்கத்தில் பங்கேற்றன.
இந்த துப்புரவு இயக்கம் வெற்றிகரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.






