ஷா ஆலம், நவ 24- கிழக்குக் கரை இணைப்பு இரயில் திட்ட (இ.சி.ஆர்.எல்.) கட்டுமானப் பணிகளால் பாதிக்கப்பட்ட மாநில அரசு நிலத்தில் குடியிருக்கும் குடிசைவாசிகள் உள்பட வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இ.சி.ஆர்.எல். திட்டத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்த இழப்பீடு பொருந்தும் என்று வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கெந்திங் சுரங்கப் பாதையை உட்படுத்திய 6.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஏழாவது கட்டுமானப் பிரிவு, கோம்பாக் முதல் செரெண்டா வரையிலான 35.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எட்டாவது கட்டுமானப் பிரிவு, செரண்டா முதல் கோல கிள்ளான் வரையிலான 48.7 கிலோ மீட்டர் நீள ஒன்பதாவது கட்டுமானப் பிரிவு ஆகியவை இழப்பீட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
1960ஆம் ஆண்டு நில கையகப்படுத்துதல் விதிகளுக்கு ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அவர் சொன்னார்.
இந்த இ.சி.ஆர்.எல். திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நிலத்தின் மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். அரசாங்க நிலத்தில் குடியிருக்கும் குடிசைவாசிகள் கருணைத் தொகையைப் பெறுவர் என்றார் அவர்.
இந்த இரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ரூமா சிலாங்கூர் கூ வீடுகளை வாங்குவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தினால் குடியிருப்பை இழந்தவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் செமெந்தா உறுப்பினர் நோர் நஜ்ஹான் முகமது சாலே எழுப்பிய கேள்விக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சார்பாக பதிலளித்த போது இங்கு இவ்வாறு தெரிவித்தார்.








