ஷா ஆலம், நவ 23: 98 நாள் மகப்பேறு விடுப்பு விதியை அமல்படுத்தாத முதலாளிகள் தொடர்பாக 44 புகார்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மனிதவள அமைச்சகத்துக்கு வந்துள்ளது.
மொத்தத்தில் 28 புகார்கள் ஆதாரபூர்வமானவை என்றும் மீதமுள்ள 16 புகார்கள் ஆதாரமற்றவை என்றும் அதன் துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் கூறினார்.
"ஆதாரமுள்ள புகார்களுக்குச் சம்பந்தப்பட்ட முதலாளிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, சரி செய்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"அனைத்து வழக்குகளும் பணியாளருக்கு 98 நாள் மகப்பேறு விடுப்பு உரிமையை வழங்குவதற்கான முதலாளியின் இணக்கத்தின் மூலம் தீர்க்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
நேற்று டேவான் ராக்யாட்டில் 98 நாள் மகப்பேறு விடுப்பு கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஈப்போ மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்விதிக்கு இணங்கத் தவறும் முதலாளிகள் அதிகபட்சமாக RM50,000 வரை அபராதம் அல்லது வழக்கை எதிர்கொள்கின்றனர்.
"நாங்கள் ஆலோசனை சேவைகளை வழங்குகிறோம், கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பிற்காகச் சுவரொட்டிகளை வெளியிடுகிறோம், மேலும் அக்டோபர் 31 வரை 23,279 சட்டப்பூர்வ ஆய்வுகளை மேற்கொண்டோம்," என்று அவர் கூறினார்.
ஜனவரி 1 முதல் வேலை சட்டம் 1955 இல் அரசாங்கம் திருத்தங்களைச் செயல்படுத்தியது. திருத்தத்தின் உள்ளடக்கங்களில், மகப்பேறு விடுப்பு 60 நாட்களில் இருந்து 98 நாட்களாகவும் ஏழு நாட்கள் மகப்பேறு விடுப்பும் அறிவிக்கப்பட்டது.
கூடுதலாக, வாராந்திர வேலை நேரத்தை 48 மணி நேரத்தில் இருந்து 45 மணி நேரமாகக் குறைப்பதுடன், ஊழியர்களுக்கான நெகிழ்வான பணி ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது.




