கோலாலம்பூர், நவ 22- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளந்தான்,
திரங்கானு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் இன்று காலை 8.00 மணி
நிலவரப்படி 5,202 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்
அனைவரும் 38 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து
வருகிறது. இங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று
காலை 4,787 பேராக உயர்ந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 4,476
ஆக இருந்தது.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோல நெருஸ்
விளங்குவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது. இங்கு
அமைக்கப்பட்டுள்ள 13 தற்காலிக நிவாரண மையங்களில் 388
குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
வெள்ளம் அதிகம் சூழ்ந்த மற்றொரு மாவட்டமான கோல திரங்கானுவில்
ஐந்து வெள்ளத் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு 319
குடும்பங்களைச் சேர்ந்த 1,095 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெசுட்
மாவட்டத்தில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 637 பேர் நான்கு துயர் துடைப்பு
மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கிளந்தான் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி ஏழு துயர் துடைப்பு
மையங்களில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 376 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 80 குடும்பங்களைச்
சேர்ந்த 316 பேராக இருந்தது.
பேராக் மாநிலத்தின் கிரியான் மாவட்டதில் வெள்ள அகதிகளின்
எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.அலோர் பெங்சுவில் உள்ள
ஒரு துயர் துடைப்பு மையத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர்
அடைக்கலம் நாடியுள்ளனர்.
இதனிடையே, கிரியான், லாருட் மாத்தாங், உலு பேராக், கோல கங்சார்,
மஞ்சோங் ஆகிய மாவட்டங்களில் நாளை வரை தொடர்ந்து மழை
பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.




