கோலாலம்பூர், நவ. 22- தாங்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற எண்ணம் உறுப்பினர்கள் மனதில் எழாதிருக்க கட்சித் தலைவர்கள் அல்லது உறுப்பினர்களின் குரல்களைக் கேட்க பி.கே.ஆர். தயாராக இருப்பதாகக் கட்சியின் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.
மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் பங்கு குறித்து விரைவில் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சியின் பொதுப் பேரவை விவாதிக்கும் என்ற மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்ததாகச் சமீபத்திய ஊடகச் செய்தி தொடர்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இவ்விவகாரத்தை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகக் கூறிய நிக் நஸ்மி, கட்சி எந்த ஒரு சமூகத்தையும் ஓரங்கட்டவோ அல்லது குறிப்பிட்ட இனத்திற்கு ஆதரவாகவோ இருந்ததில்லை என்பதை வலியுறுத்தினார்.
இந்த உணர்வை நான் புரிந்துகொள்கிறேன். ஏனென்றால் கெஅடிலான் பல்லின உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைக் கொண்ட ஒரு தேசியக் கட்சியாகும். கட்சி சார்பில் அமைச்சரவையில் தியோங்வா (சீன) சமூகம், இந்திய சமூகம் மற்றும் சபாவைச் சேர்ந்த துணை அமைச்சர்கள் உள்ளனர்.
எனவே, இந்தக் கருத்தை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் இது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 15வது பொதுத் தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து ஒரு நிலையான அரசாங்கம் அமைப்படுவதை உறுதிசெய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல விவகாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒற்றுமை அரசாங்கம் இது என்று அவர் கூறினார்.




