கோலாலம்பூர், நவ 22- நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி கிளந்தான்
மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திரங்கானு மாநிலத்தில் முதலாவது வெள்ள அலையின் தாக்கம்
தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 28
துயர் துடைப்பு மையங்களில் 3,917 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று
மாலை இந்த 18 துயர் துடைப்பு மையங்களில் 2,751 பேர் மட்டுமே
தங்கியிருந்தனர்.
கோல நெருஸ் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 12 நிவாரண மையங்களில்
370 குடும்பங்களைச் சேர்ந்த 1,426 பேர் அடைக்கலம் நாடியுள்ள
வேளையில் கோல திரங்கானுவில் உள்ள ஐந்து துயர் துடைப்பு
மையங்களில் 309 குடும்பங்களைச் சேர்ந்த 1,053 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின்
செயலகம் கூறியது.
மாராங்கில் உள்ள ஆறு நிவாரண மையங்களில் 234 குடும்பங்களைச்
சேரந்த 926 பேரும் பெசுட்டில் உள்ள நான்கு துயர் துடைப்பு மையங்களில்
113 குடும்பங்களைச் சேர்ந்த 504 பேரும் அடைகலம் நாடியுள்ளனர்.
இதனிடையே, கோல நெருஸ், கெமமான், செத்தியு மற்றும் மாராங்
தவிர்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நீர் மட்டம் வழக்கமான
அளவில் உள்ளதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை
மாற்ற அமைச்சு தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும்
நிலையில் நேற்றிரவு 80 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேர் தற்காலிக
நிரவாண மையங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
பாசீர் பூத்தேவில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களிலும்
பாச்சோக்கில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களிலும்
பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் நிவாரண செயல்குழு
தெரிவித்தது.




