ஜொகூர் பாரு, நவ. 21 - குழந்தைகளை காரில் விட்டுச் செல்லும் ஆபத்தானச் சம்பவங்களைத் தடுப்பதற்கு ஏதுவாக கார்களில் கருப்பு நிறக் கண்ணாடிகளுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் போக்குவரத்து அமைச்சின் அதிகாரத்திற்குட்பட்டது என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
இந்த விவகாரம் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக்கின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று நேற்று இங்கு 2023 ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் தின கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சம்பவங்களுக்கு வாகனங்களின் கருப்பு நிறக் கணாணாடிகளும் ஒரு காரணமாகும். எனவே இதன் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதா என்று முடிவெடுப்பது போக்குவரத்து அமைச்சைப் பொறுத்ததாகும் என் அவர் கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களில் பூட்டப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் கைவிடப்பட்ட மூன்று மரண சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து வாகனங்களில் கருப்பு நிறக் கண்ணாடிகளுக்குத் தடை விதிப்பது குறித்து மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு ஆலோசித்து வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில், சமீபத்தில் கெடாவின் சிக் மாவட்டத்தில் பி.வி.சி. குழாயினால் தாக்கப்பட்டு காயமடைந்த மதரஸா மாணவரின் குடும்பத்திற்குச் சமூக நலத்துறை ஆலோசக சேவை வழங்கும் என்று நான்சி கூறினார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறிய அவர், 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1) (a) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகச் சொன்னார்.




