NATIONAL

கட்டுமான தளத்தில் சுமார் 20 மீட்டர் உயரத்தில் டவர் கிரேன் ஆப்ரேட்டர் மரணம்

17 நவம்பர் 2023, 7:15 AM
கட்டுமான தளத்தில் சுமார் 20 மீட்டர் உயரத்தில் டவர் கிரேன் ஆப்ரேட்டர் மரணம்

கோலாலம்பூர், நவ 17: நேற்று பெர்சியாரான் கேஎல்சிசியில் உள்ள கட்டுமான தளத்தில் சுமார் 20 மீட்டர் உயரத்தில் உள்ள கேபினில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட டவர் கிரேன் ஆபரேட்டர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

மாலை 5.43 மணிக்குத் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஓர் இயந்திரத்துடன் 10 உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாகவும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) கோலாலம்பூர் மூத்த செயல்பாட்டுத் தலைவர், மியோர் முஹம்மட் ஃபிக்ரி முகமட் சைனி கூறினார்.

27 வயதான பாதிக்கப்பட்ட நபரின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், அருகிலுள்ள டவர் கிரேன் உதவியுடன் இரவு 7.46 மணியளவில் வெற்றிகரமாக கீழே இறக்கப்பட்டது.

"சுகாதார அமைச்சகத்தின் (கேகேஎம்) மருத்துவ அதிகாரி பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயாவைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

"இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.