NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை அடுத்தாண்டு மே மாதம் திறக்கப்படும்

17 நவம்பர் 2023, 6:54 AM
பத்தாங் காலி-கெந்திங் சாலை அடுத்தாண்டு மே மாதம் திறக்கப்படும்

ஷா ஆலம், நவ 17 - பத்தாங் காலி- கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையில்

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மலைச்சாரலை சரி செய்யும் பணி

அடுத்தாண்டு மே மாதவாக்கில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கோடியே 90 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மலைச்சாரல்

சீரமைப்புத் திட்டம் தற்போது 38.6 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள

நிலையில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு கருதி இத்திட்டத்தை மிக

கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அடிப்படை வசதிகள்

துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அடுத்தாண்டு மே மாதம் 29ஆம் தேதிக்குள் சீரமைப்பு பணிகள் முற்றுப்

பெறும் என எதிர்பார்க்கிறோம். மலைச்சாரலின் நிலை மற்றும் சாலையின்

பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதால் சீரமைப்புப் பணிகள்

முற்றுப் பெற்ற ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பின்னரே

அச்சாலை போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று பத்தாங் காலி நிலச்சரிவு தொடர்பான

ஆகக் கடைசி நிலவரம் குறித்து புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர்.ராஜீவ்

எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அந்த நிலச்சரிவு பேரிடர் தொடர்பான விரிவான அறிக்கை கடந்த மாதம்

வெளியிடப்பட்டதாகக் கூறிய இஷாம், தேசிய பேரிடர் மேலாண்மை

நிறுவனத்தின் (நட்மா) அகப்பக்கம் மூலம் அந்த அறிக்கையைப் பெறலாம்

என்றார்.

தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள

மலைச்சாரல் வலுவிழந்து பொழுதுபோக்கு தங்குமிடப் பகுதியை

முழுமையாகத் தரைமட்டமாக்கியது என்று அவர் சொன்னார்.

பொதுவாகப் பார்க்கையில் இந்த சம்பவத்திற்கு எந்த தரப்பினரின்

அலட்சியப் போக்கும் காரணமாக அமையவில்லை. மலைச்சாரலின்

கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட நீரோட்டம் காரணமாக மண் வலுவிழந்ததே இதற்கு காரணமாகும். இதற்கான அறிகுறி எதுவும் தென்படாததே

துரதிர்ஷ்டமான விஷயமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.