NATIONAL

சிலாங்கூரில் 271 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 5,000 இடங்களில் வெள்ள அபாயம்

17 நவம்பர் 2023, 3:03 AM
சிலாங்கூரில் 271 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 5,000 இடங்களில் வெள்ள அபாயம்

கோல நெருஸ், நவ 17- இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் வெள்ள அபாயம் உள்ள மொத்தம் 5,648  பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சரவாக் மாநிலத்தில் 1,066 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளையில்  சபா (798 இடங்கள்), பகாங் (750 இடங்கள்), ஜோகூர் (745 இடங்கள்), கிளந்தான் (617 இடங்கள்), பேராக் (286 இடங்கள்) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளதாக  பொது தற்காப்புப் படையின் (ஏ.பி.எம்.) தலைவர் டத்தோ அமினுர் ரஹீம் முகமது தெரிவித்தார்.

இவை தவிர, சிலாங்கூரில் 271 இடங்களும் கெடாவில் 260 இடங்களும் திரங்கானுவில் 258 இடங்களும்   பினாங்கில்  241 இடங்களும் மலாக்காவில் 124 இடங்களும் நெகிரி செம்பிலானில் 120 இடங்களும்  கோலாலம்பூரில் 73 இடங்களும் பெர்லிஸ் மாநிலத்தில் 22 இடங்களும்  லாபுவானில் 17 இடங்களும் வெள்ள அபாயம் உள்ளவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் வெள்ளம் அல்லது பிற பேரிடர்களின் போது உடன் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக அனைத்து முக்கிய ஆவணங்கள், மருந்துகள், விளக்குகள் மற்றும் ஆடைகள் போன்ற அவசரகால பொருட்களை முன்கூட்டியே தயார் செய்யுமாறு அவர் நினைவூட்டினார்.

ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஒரு 'ரெடி டு கோ' பையை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதில் அனைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் அவசரகாலப் பொருட்கள் தயாராக வைத்திருக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

அதுமட்டுமின்றி,  உங்கள் உயிரைக் காப்பாற்றப் பாடுபடும் பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள் என அவர் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், ஏ.பி.எம். இந்த ஆண்டு பொது மக்களுக்காக 6,266 வெள்ள அவசரநிலை மற்றும் தயார் நிலைப் பயிற்சிகளை தொடர்ச்சியாக நடத்தியதாகவும் அவர் கூறினார்.

கட்டங் கட்டமாக நடத்தப்பட்ட இந்த பயிற்சிகளில் சமூகத் தலைவர்கள், கிராமவாசிகள், உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 350,474  பேர் பங்கேற்றனர் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.