ஷா ஆலம், நவ. 17- ஜாலான் டுங்குன்-புக்கிட் பீசியின் 11வது கிலோமீட்டரில் கம்போங் செர்டாங்கிற்கு அருகில் நேற்று மதியம் லோரி ஒன்று இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் லோரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் உயிரிழந்தனர்.
பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் முகமது ஷாருல் ஹபீப் அப்துல் காடிர் (வயது 37) மற்றும் அவரது உதவியாளர் ரிட்சுவான் முகமது (வயது 43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெரித்தா ஹரியான் இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் பயணம் செய்த லோரி உட்பட இரண்டு லோரிகள் மரப் பொருட்களை விநியோகம் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் மைஸூரா அப்துல் காடீர் கூறினார்.
சாலை சந்திப்பு ஒன்றை நெருங்கிய போது முன்னாள் சென்ற லோரி சாலையின் வலதுபுறம் செல்வதற்காக நின்றதாகக் கூறப்படுகிறது. பின்னால் வந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த லோரியின் பின்புறத்தில் மோதியது.
பலமான மோதலின் காரணமாக முன்னால் சென்ற லாரி முன்னோக்கி நகர்ந்து 31 வயது நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் வீரா காரை மீது மோதியது என்று அவர் கூறினார்.
வலுவான மோதலால் முகமது ஷாருல் ஹபீப் மற்றும் ரிட்சுவான் ஆகியோர் முன்புற லோரியில் மரக்கட்டைகள் உடலில் ஊடுருவிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக டுங்குன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த புரோட்டான் வீரா மற்றும் மற்றொரு லாரியின் ஓட்டுநர் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார் அவர்.




