ECONOMY

சுங்கை பூலோ வெள்ளத் தடுப்புத் திட்டம்- மத்திய அரசிடம் வெ.76 கோடி நிதி அங்கீகாரத்தை மாநில அரசு கோருகிறது

16 நவம்பர் 2023, 11:28 AM
சுங்கை பூலோ வெள்ளத் தடுப்புத் திட்டம்- மத்திய அரசிடம் வெ.76 கோடி நிதி அங்கீகாரத்தை மாநில அரசு கோருகிறது

ஷா ஆலம், நவ 16- பெட்டாலிங் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் வெள்ளத்தை தடுக்கும் புதிய முயற்சியாக சுங்கை பூலோ வெள்ளத் தணிப்புத் திட்டதின் இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் அங்கீகாரம் மற்றும்  76 கோடி வெள்ளி மானியத்தை மாநில அரசு கோருகிறது.

இந்த திட்டத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற அப்போது 5 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளப் பிரச்சனைக்கு ஆக்ககரமான முறையில் தீர்வு காண்பதற்கு மதிப்பிடப்பட்ட 45 கோடியே 60 லட்சம் வெள்ளியில் இது ஒரு பகுதி மட்டுமே என அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி வரையறைக்குட்டதாக மட்டுமே இருந்த காரணத்தால் கோல சிலாங்கூர் மாவட்டத்தை மையமாக கொண்டு முதல் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் கடுமையான வெள்ளப் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக கடுமையான மழையுடன் கடலில் நீர் பெருக்கும் சேர்ந்து ஏற்படும் போது வடிகால்களில் சேர்கின்ற நீர் ஆறுகளில் கலக்க முடியாத நிலை ஏற்படுகிறது.‘

இதன் காரணமாகவே இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கு நாங்கள் அனுமதி கோருகிறோம். இத்திட்டத்திற்கு தேவைப்படும் 76 கோடி வெள்ளி நிதியை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டாம் கட்ட திட்டம் சுங்கை பூலோ ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் உள்ள துணை ஆறுகளை இலக்காக கொண்டிருக்கும். இத்திட்ட அமலாக்கம் மூலம் பெட்டாலிங் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில்  வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலும் என்றார் அவர்.

பாயா ஜெராஸ் தொகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தொகுதி உறுப்பினர் டத்தோ ஹலிம் தாமுரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இஷாம் இவ்வாறு சொன்னார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.