ஷா ஆலம், நவ. 15 - சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தை தங்களின் அரசியல் தோரணை மற்றும் பிரச்சாரத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியும் அவரின் பெரிக்காத்தான் நேஷனல் சகாக்களும் பயன்படுத்துவதாக ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி சாடினார்.
மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் தனது கடமைகளை எவ்வாறு செய்வது எனக் "கற்றுத்" தர முயற்சிப்பதன் மூலம் அவர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அவர்களின் செயல்கள் உண்மையான நிர்வாகத்தை விட விளையாட்டுத்தனம் நிறைந்ததாக உள்ளது. இந்த உயரிய சபை உண்மையை நிலைநிறுத்த வேண்டிய இடமாகும். அரசியல் நடிகர்கள் கட்சி பிரச்சாரத்தை பரப்புவதற்கான ஒரு தளம் அல்ல. சிலாங்கூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய நாம் இந்தச் சபையில் நமது சொந்தப் பொறுப்புகளை மட்டுமல்ல, மற்றவர்களின் பொறுப்புகளையும் மதிக்க வேண்டும் என அவர் சொன்னார்.
மந்திரி பெசார் தனது கடமைகளைச் செய்யட்டும். சபாநாயகர் தனது பொறுப்புகளை நிறைவேற்றட்டும், அதே போல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்தந்த பணிகளைச் செய்யட்டும்.
மற்றவர்களின் பாத்திரங்களை ஏற்றுக்கொள்வது, மோதல்களைத் தூண்டுவது அல்லது சபாநாயகரின் கடமைகளை எவ்வாறு செய்வது என்று அறிவுறுத்துவதை விட நாம் பரஸ்பர மரியாதையை வளர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் பதவியை ஏற்க விரும்பினால், மாநிலத் தேர்தலில் முதலில் வெற்றி பெற்று தங்களுக்குள் பதவியைப் பெறுவதும் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று இன்று 2024 சிலாங்கூர் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அவர் கூறினார்.
அவரது கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக தாமான் மேடான் பிரதிநிதி அஃபிப் பஹார்டின் மற்றும் கோம்பாக் செத்தியா உறுப்பினர் முகமது ஹில்மான் இடாமிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.








