ஷா ஆலம், நவ 15- மாநிலத்தின் மேம்பாட்டை வடிவமைக்கும் நோக்கில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட முதலாவது சிலாங்கூர் திட்டம் இதுவரை 2,910 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீட்டு கடப்பாட்டை பதிவு செய்துள்ளது.
சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி (சாப்டா), தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பகுதி (இட்ரிஸ்), கெர்பாங் மெரிடைம் சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய உயர் மதிப்பு கொண்ட மெகா திட்டங்களை அந்த முதலீடு உள்ளடக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுமார் 300 கோடி வெள்ளி மதிப்பிலான இட்ரிஸ் மேம்பாட்டுப் பகுதியில் உள்ள விவேக தொழிலியல் பூங்காவில் அமைக்கப்படவிருக்கும் உற்பத்தி தொழில் துறை, சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு மையம், பெட்டாலிங் ஜெயாவில் அமையவிருக்கும் தரவு மையம் ஆகியவையும் அவற்றில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
ஆறு கோடி வெள்ளிக்கும் அதிகமான முதலீட்டைக் கொண்ட விவசாயத் திட்டம் சாப்டார் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள முதலீட்டு வாய்ப்புள்ள துறைகளாக இவை விளங்குகின்றன. நில விவகாரம் குறித்து தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக வேளாண் பூங்கா திட்டத்திற்கு இதுவரை கடப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
மொத்தம் 262 பிரத்தியேகத் திட்டங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை இந்த முதலாவது சிலாங்கூர் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்று கோம்பாக் செத்தியா உறுப்பினர் ஹில்மான் இட்ஹாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாநிலத்தின் மேம்பாட்டை உறுதி செய்யக்கூடிய முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் கடந்தாண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் மொத்த மதிப்பு 21, 244 கோடி வெள்ளியாகும்.








