காஸா, நவ 15- ஹமாஸ் போராளிகளை குறிவைத்து காஸா தீபகற்பத்திலுள்ள அல் ஷிபா மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் தாங்களாக முன்வந்து சரணடையுமாறு ஹமாஸ் போராளிகளை அறிவுறுத்தியுள்ளது.
இன்னும் சில நிமிடங்களில் தாங்கள் அல் ஷிபா மருத்துவமனையை முற்றுகையிடப் போவதாக இஸ்ரேல் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தங்களிடம் தெரிவித்ததாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு கூறியது.
உளவுத் தகவல்கள் மற்றும் தேவையின் அடிப்படையில் அல் ஷிபா மருத்துவமனையில் உள்ள சில இடங்களை இலக்காக கொண்டு ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதலை தாங்கள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மிகவும் உணர்ச்சிகரமான அந்த மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவக் குழுவினர் மற்றும் அரபு மொழி பெயர்ப்பாளர்களுடன் தற்காப்பு அமைச்சின் படையினர் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று அது குறிப்பிட்டது
அந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டு மையத்தைக் கொண்டிருப்பதாக இஸ்ரேல் முன்னதாக .குற்றஞ்சாட்டியிருந்தது. பிணைக்கைதிகளை தடுத்து வைப்பதற்கும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அந்த மருத்துவமனையையும் சுரங்கப் பாதையையும் ஹமாஸ் படையினர் பயன்படுத்தி வருவதாக அது கூறியது.
இஸ்ரேலின் இந்த கூற்றை ஹமாஸ் மறுத்துள்ள நிலையில், இஸ்ரேல் கூறுவதில் உண்மை உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத்தை முற்றாக துடைத்தொழிக்கப் போவதாக சூளுரைத்துள்ளது.








