புத்ராஜெயா, நவ. 14 - இவ்வாண்டு அக்டோபர் 30 ஆம் தேதி வரை தொழிற்சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்து லட்சம் உறுப்பினர்கள் இலக்கை அடைய 2025 ஆம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை முன்கூட்டியே அது அடையப்பட்டு விட்டதாக மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.
இது ஒரு சாதனை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக அதிக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கும் அமைச்சுக்கு இது பெருமை தரக்கூடிய விஷயமாகும் என்று கூறினார்.
நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் தொழிற்சங்க உறுப்பினர் விகிதம் பாதியாக இருப்பதை உறுதி செய்ய தொழிற்சங்கங்களில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சிவக்குமார் தெரிவித்தார்.
நாட்டில் 1 கோடியே 60 லடசம் தொழிலாளர்கள் உள்ளனர். மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தொழிற்சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதி என்ற விகிதத்தை எட்டினால் அது மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்றார் அவர்.
இதற்கிடையில், இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புறக்கணிப்பு இயக்கங்கள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது வேலை பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மனித வள அமைச்சிடம் புகார் செய்யலாம் என்று அவர் கூறினார்.
அமைச்சிடம் புகார் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. இந்த விஷயத்தை நாங்கள் கவனிப்போம். எனினும், இதுவரை இதன் தொடர்பில் அமைச்சு எந்த அறிக்கையும் பெறவில்லை என்றார் அவர்.








