நிபோங் திபால், நவ15 - ஓட்டுநர் உரிமத்தை 12 ஆண்டுகளாக புதுப்பிக்காத தொழிற்சாலைப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் அண்மையில் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் பாத்தோ நடவடிக்கையில் பிடிபட்டார்.
நாற்பத்தெட்டு வயதான அந்த பஸ் ஓட்டுநர், 33 வெளிநாட்டுத் தொழிலாளர்களை பத்து காவானில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து வால்டோர் பகுதியில் உள்ள அவர்களது தங்குமிடத்திற்கு ஏற்றிச் சென்றபோது சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.), பினாங்கு போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு, தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சிக்கினார்.
போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன்களை செலுத்த பணத்தை செலவழித்ததால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தம்மால் லைசென்ஸை புதுப்பிக்க முடியவில்லை என்றும் மாற்று ஓட்டுநராக வேலை செய்யும் தமக்கு ஒரு பயணத்திற்கு 30 வெள்ளி மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் அந்த ஓட்டுநர் காரணம் கூறியுள்ளார்.
அதிகாரிகள் அந்த பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநருக்கு சம்மன் வழங்கியதோடு உரிமம் இல்லாத நபரை பஸ் ஓட்டுவதற்கு அறுமதித்த குற்றத்திற்காக அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக பினாங்கு மாநில ஜே.பி.ஜே. இயக்குனர் டத்தோ அட்னான் முகமது ஈசா கூறினார்.
இதுபோன்ற வாகனமோட்டும் உரிமம் பெறாத பல ஓட்டுநர்கள் உள்ளனர். மேலும், பலருக்கு பொது போக்குவரத்து வாகன உரிமம் இல்லை. அந்த ஆவணங்கள் முக்கியம் என அவர்கள் கருதாததால் உரிமம் பற்றி கவலைப்படுவதில்லை என்று அவர் சொன்னார்.
நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய ஓப் பாத்தோ நடவடிக்கை நேற்று மாலை முடிவுக்கு வந்தது. 2,203 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு குற்றங்களுக்காக 2,806 சம்மன்களை வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.








