ஷா ஆலம், நவம்பர் 15 - ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்திடமிருந்து கடன் பெற்றவர்களில் 15,000க்கும் மேற்பட்டோர் அல்லது 22 விழுக்காட்டினர் 13 கோடியே 50 லட்சம் வெள்ளியை திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளதாக சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வர்த்தகக் கடனுதவித் திட்டத்தின் மூலம் 58,885 பேருக்கு மொத்தம் 78 கோடி வெள்ளி கடனாக வழங்கப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
இதுவரை 78 சதவீதம் பேர் தங்கள் கடனை முறையாகச் செலுத்தியுள்ளனர். ஆனால் 22 விழுக்காட்டினர் தன்மூப்பாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவித் திட்டத்தின் கடனாளிகளின் எண்ணிக்கை மற்றும் நிலுவையில் உள்ள கடன்கள் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பியக் கேள்விக்கு நஜ்வான் இவ்வாறு பதிலளித்தார்.
கடனைத் திரும்பப் பெறுவதற்கான பல்வேறு கோணங்களை மறுபரிசீலனை செய்யவும் வசூல்செய்வதற்கான குழுக்களை அடையாளம் காணவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் 790 சோலார் சாலை விளக்குகளை நிறுவ சிலாங்கூர் அரசாங்கம் கிட்டத்தட்ட 60 லட்சம் ஒதுக்கியுள்ளதாக மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.








