கோலாலம்பூர், நவ 14 - கெமாமான் நாடாளுமன்றத் தொகுதி அம்னோவின் கோட்டையாக இருப்பதாலும், அது பாஸ் கட்சியின் அரண் அல்ல என்பதாலும் வரும் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திரங்கானு மாநிலத்தில் உள்ள அத்தொகுதியை வெற்றி கொள்ள முடியும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி நம்பிக்கைக் கொண்டுள்ளார்.
அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுக்கு எதிராக சுமத்தப்பட்ட அவதூறுகள் காரணமாகவும் எதிர்க்கட்சிகளின் அசாதாரண நிதி ஆதாரங்கள் காரணமாகவும் 15வது பொதுத் தேர்தலில் கட்சி அத்தொகுதியில் தோல்வியடைந்ததாக துணைப் பிரதமருமான அவர் சொன்னார்.
கெமாமான் தொகுதி பாஸ் கட்சியின் அரண் அல்ல, அது அம்னோவின் கோட்டை என்று நாங்கள் உணர்கிறோம் என்றார் அவர்.
ஆயினும், அம்னோ மற்றும் தேசிய முன்னணி மீதான அவதூறு மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகள், அளவுக்கு அதிகமாக நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தியது போன்றவை காரணமாக கெமாமானில் எங்களுக்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள மெனாரா டத்தோ ஓனில் கெமாமான் தொகுதிக்கான பாரிசான் வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.
கெமாமன் இடைத்தேர்தலில் போட்டியிட பாரிசான் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி டான்ஸ்ரீ ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.




