கோலாலம்பூர், நவ 11- தீபாவளி போன்ற பெருநாள்களின் போது இணையம் மூலம் பொருள்களை வாங்கும் பாணி மக்களிடம் குறிப்பாக இளையோர் மத்தியில் அதிகரித்து வந்த போதிலும் நாட்டிலுள்ள நான்கு லிட்டில் இந்தியா வர்த்தக மையங்களில் மக்கள் கூட்டம் இன்னும் நிரம்பிக் காணப்படுகிறது. தீபாவளிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அவர்கள் கடைசி நேரத்தில் பொருள்களை வாங்குவதற்கு பெரும் திரளாக இந்த மையங்களில் குவிந்துள்ளனர்.
தலைநகரில் இந்தியர்களின் பிரசித்தி பெற்ற வர்த்தக மையமாக விளங்கும் பிரீக்பீல்ட்ஸ் பகுதியில் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதி முழுவதும் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.
இந்த வர்த்தக மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்ட போதிலும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் தமது கடைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக அங்கு வர்த்தகம் புரியும் டி.விமல்ராஜ் (வயது 24) கூறினார்.
கடந்தாண்டில் முறுக்கு உள்ளிட்ட தீபாவளிப் பலகாரங்கள் விற்றுத் தீர்ந்ததைத் தொடர்ந்து கையிருப்பை தொடர்ந்து அதிகரித்து வந்தேன். ஆனால் இம்முறை வர்த்தகம் சற்று மந்தமாகவே உள்ளது என அவர் சொன்னார்.
பினாங்கு, ஜாலான் கம்போங் பெங்காலியில் உள்ள தீபாவளி கடைகளில் வீட்டு அலங்காரப் பொருள்கள், உடைகள் மற்றும் பலகாரங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வந்து கொண்டிருப்பதை காண முடிந்தது.
இந்த பகுதியில் கடந்தாண்டைப் போலவே வர்த்தகம் சிறப்பாக இருந்த போதிலும் இணைய வர்த்தகம் அதிகரித்த காரணத்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சற்று சரிவு கண்டுள்ளது என வியாபாரிகள் கூறினர்.
சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளானில் உள்ள ஜாலான் தெங்கு கிளானாவில் இறுதி நேர ஷோப்பிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகமான மக்கள் கூட்டம் காரணமாக இந்த பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜாலான் யாம் துவானில் உள்ள லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. வண்ணக் கோலம் பூண்டுள்ள இப்பகுதியில் வணிகர்கள் வீட்டு அலங்காரப் பொருள்கள், உணவு, நகைகள் மற்றும் மலர்களை வாங்குவதை காண முடிகிறது.








